LabTap (லப் டப்) - the heart beat of an empty vessel

Thursday, July 10, 2014

கவிதை


மௌனம்

சத்தங்களும் சுமையாகிப் போன ஒரு பொழுதில்
நீ என்னைக் காண வந்தாய்
அமைதியை விரும்பிய என் எண்ணத்தை
கண்டுகொண்டாய் நீ
அது எனக்கு பிடித்திருந்தது

புன்னகையோடு என் அருகே அமர்ந்தாய்
என் மௌனத்தோடு கலந்தது உன் மௌனம்
அதுவரை விரும்பிய அமைதியை விட
விருப்பமாகிப் போனாய் நீயெனக்கு



Wednesday, December 29, 2010

உதிர் இலைகள்

இதமாய் தவழ்ந்திடும் காற்றோடு
நிதானமாய் உரையாடும் இலைகள்

நிலையாய் நிற்காமல்
கட்டற்று திரியும் வாழ்க்கை
எத்தனை அழகென்று
இலைகள் கேட்கும் கேள்விக்கு
காற்று பதில் தருவதில்லை

காற்றின் புதிரான மௌனத்திற்கு
அர்த்தம் தேடி
தங்களுக்குள் சலசலத்து
குறுகுறுப்பாய் ஆராயும்

நுனிக் கிளையில் சிறைபட்டு வாழும்
துக்கத்தின் கண்ணீரை
பனித்துளிகளுக்குள் மறைத்திடும்
பெரும்பாலும்

கடைசியாய் பார்த்தபொழுது
தன்னையும் அதனோடு கூட்டிச்செல்லுமாறு
தரையோடு புரண்டு
காற்றோடு மன்றாடிக்கொண்டிருந்தது
காய்ந்து உதிர்ந்த ஒர் இலை

Thursday, February 12, 2009

உண்மை தேடல்

ஏதேதோ தேடி அலைந்திருந்த மனம்
பேராசை கொண்ட ஒரு நாள்
உண்மையைத் தேடத் துணிந்தது

தேடியலைந்த நான்
உண்மையென தன்னை அறிவித்த ஒன்றை
பற்றிக்கொண்டேன்

உண்மையைப் பற்றிக்கொண்டிருக்கும்
என் கைகள் தளரக்கூடும்
உண்மை நித்யம் நிலைக்கும்
என நினைத்திருந்தேன்

ஆனால் பற்றியிருந்த உண்மையின் பரப்புகளில்
சுருக்கங்கள் விழுந்த பொழுது
ஏமாற்றத்திற்கு அளவில்லை
பிறிதொன்றைப் பற்றும்வரை

உண்மை என நேற்று நினைத்தவைகள்
நீர்த் திரை பிம்பகளினும் வேகமாய்
உருமாறுவதைக் கண்டு
இன்று பற்றிக்கொண்டிருப்பவைகளின் மேல்
சந்தேக விரிசல்கள்

கணக்கற்ற முறை தேடித்தேடி
தேடல் மட்டுமே உண்மை என உணர்ந்த பின்
தேட முடியும் வரை
தேடுவதாய் முடிவு செய்துள்ளேன்

ஆனால் எதைத் தேடுவது?

Labels: ,

Friday, August 15, 2008

PiT போட்டிக்காக - The Lazy Trinity

The Lazy Trinity




இது வரைக்கும் PiT போட்டில வெற்றி பெறல.
இந்த ஆமைகளாவது போட்டில முன்னாடி வருதான்னு பார்க்கலாம் !!!
















Sunday, July 27, 2008

யந்திர ரகசியம்

(சிறில் அவர்கள் நடத்தும் அறிவியல்-கதை போட்டிக்காக)
முன் கு*ப்பு:
மக்களே, இது என் முதல் கதை முயற்சி. உங்கள் எண்ணங்களை சொல்லிச்சென்றால் எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
காலம்: கிபி 2445

”ரோபோ என்னும் யந்திர மனிதனை எப்படி துன்புறுத்துவது? அது சேமித்து வைத்துள்ள ரகசியங்களை எப்படி பெறுவது?மனிதனை துன்புறுத்துவதென்றால் எளிது. உடலளவில் துன்புறுத்தியோ இல்லை மனதளவில் மிரட்டியோ ரகசியங்களைப் பெறலாம்.இல்லை ஆசை காட்டியேனும் ரகசியங்ளைப் பெறலாம். உடலிலோ மனதிலோ உணர்ச்சிகளும், ஆசைகளுமற்ற ஒரு யந்திர மனிதனை எப்படி துன்புறுத்தி ரகசியங்களைப் பெறுவது?” இவைதான் மனிதகுலத்தின் தலை சிறந்த விஞ்ஞானியான இனியனின் மனதை தற்பொழுது அரித்துக்கொண்டிருக்கும் கேள்விகள். ”இந்தக் கேடு கெட்ட ஆறாம் உலகப் போரால் ஒரு விஞ்ஞானியான நான் இப்படியெல்லாம் கீழ்த்தரமாக சிந்திக்க வேண்டியுள்ளதே” என தன்னைத்தானே நொந்துகொண்டார் இனியன்.


இனியனுக்கு இந்தக் கேள்விகளுக்கான பதில் ஏன் தேவையென உங்களுக்குத் தெரியாதல்லவா?. 21ஆம் நூற்றாண்டில் இருக்கும் உங்களுக்கு 25ஆம் நூற்றாண்டில் மனிதகுலம் சந்தித்து வரும் பிரச்சனைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 20ஆம் நூற்றாண்டில் ”ரோபோ” என்றால் என்ன என பத்தில் ஒருவருக்கு தெரிந்திருந்த நிலை மாறி, 21ஆம் நூற்றாண்டில் மனிதன் செய்ய தயங்கிய வேலைகளை செய்வதற்கு ஆரம்பித்து, 22ஆம் நூற்றாண்டில் சுயமாக சிந்திக்கும் திறமை பெற்றன இந்த யந்திரன்கள். 24ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யந்திரன்களின் அறிவாற்றல் மனித விஞ்ஞானிகளின் அளவிற்கு உயர்ந்தது. பின்பு யந்திர-விஞ்ஞானிகள் உருவாகி, சுயமாக ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு சிந்தனை ஆற்றல் பெற்றன. 25ஆம் நூற்றாண்டில் திடீரென ஒரு நாள் (ஜூலை 31, கி.பி 2425) உலகில் உள்ள பல ராணுவ நிலைகளை இந்த யந்திரன்கள் ஆக்கிரமித்துக்கொண்டு மனிதனுக்கெதிராக போரைத் தொடங்கின. மனிதகுலம் பேரழிவை சந்திக்கத் தொடங்கியது. யந்திரன்களால் கைப்பற்றப்படாத ராணுவ நிலைகளை வைத்துக்கொண்டு அழிவிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கடைசி முயற்சியில் ஈடுபட்டுள்ளது மனித இனம். இந்நிலையில்தான், யந்திர படையின் முக்கிய தளபதிகளில் மூன்று, ஒரு வாரத்திற்கு முன்பு மக்கள் படையிடம் சிக்கின. அந்த தளபதி யந்திரன்கள் அணைத்தும் மற்ற யந்திர-விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டவை. அவற்றின் வடிவு (design) பற்றி மனித-விஞ்ஞானிகளுக்கு அவ்வளவு தெரியாது.


அந்த தளபதி யந்திரங்களின் மூளையில் ஆயிரமாயிரம் ராணுவ ரகசியங்கள் குவிந்துள்ளன. எங்கே யந்திரங்களின் கட்டளைத்தளம் உள்ளது? எங்கெங்கு யந்திர ஒற்றர்கள் உள்ளனர்? அவர்களின் அடுத்த இலக்கு எது? போன்ற ரகசியங்கள். அந்த ரகசியங்களை தெரிந்துகொண்டால் மனிதகுலத்தின் வெற்றி வாய்ப்பு உறுதியென்றே சொல்லலாம். ஆனால் அந்த யந்திர மனிதர்களிடமிருந்து எப்படி ரகசியங்களைப் பெறுவது? அதற்காகத்தான், பிடிபட்ட யந்திர மனிதர்களை அத்துறையின் வல்லுனரான இனியனிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த யந்திரன்களின் ஞாபக பெட்டகங்கள்
சிலிக்கோ-கார்பன் சில்லுகளாக இருந்தன. ஒரு யந்திரனின் ஞாபக பெட்டகத்தைத் திறந்து உள்ளிருப்பதை படிக்க முயற்சி செய்த பொழுது அந்த யந்திரன் வெடித்து தன்னைத்தானே சிதைத்துக்கொண்டது. நல்ல வேளையாக ஆராய்ச்சிக் கூடத்தில் உயிர் இழப்புகள் ஏதுமில்லை.


”ஏன் யந்திரன்கள் பிடிபட்டபொழுதே வெடிக்கவில்லை? ஏன் ஞாபக பெட்டகத்தை திறக்க முயலும் பொழுது மட்டும் வெடிக்கிறது?” என இனியன் குழம்பிப் போனார். அப்பொழுது ஒரு தொலைத் தொடர்பு உதவியாளர் பதட்டத்தோடு ஓடி வந்தார். யந்திரன்கள் ரேடியோ அலைகள் மூலம் தங்களுக்குள் பேசிக்கொள்வதை ஒட்டுக்கேட்கும் பிரிவைச் சேர்ந்தவர் அவர். “வெடித்த யந்திரன், நமது ஆராய்ச்சி கூடத்தில் பார்த்த அத்தனையும் படங்களாக மாற்றி தன்னுடைய கட்டுப்பாட்டு நிலையத்திற்கு ரேடியோ அலைவரிசையில் அனுப்பிய பின்னரே வெடித்தது” என சொல்லவும் அதிர்ச்சியடைந்தார் இனியன். இந்த யந்திரன்கள் முடிந்த அளவு மனிதர்களின் ரகசியங்களை தெரிந்துகொள்கின்றன, ஆனால் அவற்றின் ரகசியங்களை தெரிந்துகொள்ள முயலுகையில் மட்டும் தங்களை சிதைத்துக்கொள்கின்றன என உணர்ந்தார் இனியன். யந்திரன்களை திறக்க முடியாது, துன்புறுத்த முடியுமா? எப்படி யந்திரன்களிடமிருந்து ரகசியங்களைப் பெறுவது? என அலையலையாய் கேள்விகள் அவரது மனதில். அந்தக் கேள்விகளை சுமந்தபடியே சோர்ந்து போய் வீடு திரும்பினார் இனியன்.


வீட்டில் அவரது மனைவி நிலா அவருக்காக காத்திருந்து உறங்கிப்போயிருந்தாள். அவரும், உணவு உண்ட பின் சோர்வில் உறங்கிப்போனார்.அதிகாலை இனியன் அரைத்தூக்கத்தில் புரண்டுகொண்டிருந்தார். நிலா அவர்களது குழந்தைகளை பள்ளிக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தாள். நிலாவிடம் குழந்தைகள் படுகையறையிலிருந்து எதையோ எடுத்துத் தர சொல்லி நச்சரித்துக்கொண்டிருந்தனர். சமையலறையிலிருந்த நிலா அவர்களிடம் “எனக்கு இரண்டு கைகள்தான் இருக்கிறது, இங்கே இருக்கிற வேலைகளை முடித்துவிட்டுத்தான் அங்கே வர முடியும்” எனக் கூறினாள்.அது இனியனின் காதுகளில் விழுந்தது. அவருக்குள் ஏதோ ஒரு நெருடல்.”இங்கே இருக்கிற வேலைகளை முடித்துவிட்டுத்தான் அங்கே வர முடியும்” என்ற வார்த்தைகள் அரைத்தூக்கத்தில் திரும்பத் திரும்ப அவர் மனதில் ஓடியது. யந்திரகளின் ஞாபகப்பெட்டகத்தை உடைக்க ஒரு திட்டம் திடீரென அவரது மனதில் தோன்றியது. விருட்டென எழுந்த இனியன் உணவருந்தாமலே
தனது ஆராய்ச்சிக்கூடத்திற்கு அவசரமாக ஓடினார்.


யந்திரன்களை வேறொரு அறையில் பூட்டி விட்டு, உதவியாளர்களை தனது அறைக்கு அழைத்து அவரின் திட்டத்தை விவரிக்கத்தொடங்கினார். ”ஒரு யந்திரனின் மூளையாக செயல்படுவது ஒரு சக்திவாய்ந்த Processor. அதன் ”ஞாபகம்” அல்லது மெமரி மிகவும் பெரிது. இவையிரண்டையும் நாம் பிரித்துப்பார்க்க நினைத்தோம். ஆனால் அப்படி செய்ய முயற்சித்தால், இந்த யந்திரன் தன்னையே சிதைத்துக்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் அதன் மூளையையோ, மெமரியையோ, வெடியையோ தொடுவதை உணர்ந்து வெடிக்க சில நேனோநொடிகளே எடுத்துக்கொள்கிறது. அந்த குறுகிய நேரத்திற்குள் நம்மால் வெடிகளை செயலிழக்கச் செய்ய முடியாது. ஆனால்.... மனிதர்களைப்பற்றி ஏதேனும் ராணுவ ரகசியங்கள் தன்னிடம் இருந்தால் அதனை ரேடியோ அலைகளில் அனுப்பிவிட்டுத்தான் வெடிக்கிறது. .கடைசியாக வெடித்த யந்திரன் பத்து மில்லி செகண்டில் நமது ஆராய்ச்சிக்கூடத்தில் பார்த்தது அத்தனையையும் அனுப்பிவிட்டது. அந்த பத்து மில்லி செகண்டில் ஒரு சில மெகாபைட் அளவு செய்திகளை அனுப்பியுள்ளது. அந்த யந்திரனிடம் அனுப்புவதற்கு நிறைய செய்திகள் இருந்தால், அந்த பத்து மில்லி செகண்ட் என்பது சில நொடிகளாக நீளும். அதுவரை அது வெடிக்கும் நேரம் தள்ளிப்போடப்படும். காரணம், செய்தி அனுப்பும் வேலைகளை முடித்துவிட்டுத்தான் வெடித்துச்சிதையும் வேலை Processor செயல்படுத்தும்.அதாவது the self-destruct process will be enqueued in wait state till the transmit process is finished.


ரேடியோ அலைவரிசையில் அனுப்ப பத்து நொடிகளாவது தேவைப்படும் அளவு நம்முடைய ஆயிரக்கணக்கான ராணுவ ரகசியங்களை யந்திரனுக்கு காட்ட வேண்டும். அந்த பத்து வினாடிகளில் நம்மால் யந்திரனைத் திறந்து உள்ளிருக்கும் வெடிகளை நீக்கிட முடியும். வெடிக்க வைக்கும் சர்க்யூட்டுகள் trigger ஆனாலும், வெடிகள் இல்லாததால் யந்திரன் சிதையாது, நாமும் ரகசியங்களைப் படித்திடலாம்” என்று இனியன் சொன்னவுடன், எல்லோருக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. பரபரப்புடனும் ஏற்பாடுகளை செய்யத்துவங்கினர். ஒரு மிகப்பெரிய திரையில் மனிதர்களின் ராணுவ ரகசியங்கள் அடங்கிய படக்காட்சிகள் காட்டுவதாக முடிவு செய்யப்பட்டது.

யந்திரன் தான் பார்ப்பதை Live ஆக உடனுக்குடன் அனுப்பிடாமல் இருப்பதற்காக ரேடியோ அலைகள் நுழையாத ஒரு அறைக்குள் வைக்கப்பட்டது. அங்கே ஒரு மிகப்பெரிய திரையில் மனிதர்களின் ராணுவ ரகசியங்கள் அடங்கிய படக்காட்சிகள் ஓடத்தொடங்கியது. சில மணிநேரங்கள் கழித்து அந்த அறையின் கதவுகள் திறக்கப்பட்டது. அப்பொழுதுதானே யந்திரன் தான் பார்த்தவற்றை ரேடியோ அலைகளால் தன்னுடைய கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்ப முடியும். சரியாக அந்த கணத்தில் இனியன் வேகமாக செயல்படத் துவங்கினார். அந்த யந்திரனின் மூளையும், வெடிகளும் இருக்கும் மார்புப் பகுதியை திறந்தார். பின் அடுத்த வினாடி கையிலிருந்த லேசர் கத்தி மூலம் வெடிகளுக்குச் செல்லும் மின் இணைப்பை துண்டித்தார். அந்த சில வினாடிகளில் அவரின் இதயத்துடிப்பு பல மடங்கு ஏறியிருந்தது. உள்ளங்கைகளும், நெற்றியும் வேர்த்துக் கொட்டியிருந்தது. வெற்றிகரமாக நீக்கப்பட்ட வெடிகளை உயர்த்திக்காட்டினார் இனியன். ஆராய்ச்சிக்கூடத்திலிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.


ஒரு உதவியாளர் கவலையோடு “நம்முடைய சில ரகசியங்களாவது இந்த யந்திரன் அனுப்பியிருப்பானே?” என கேட்கவும், இனியன் புன்னகைத்தபடி ”கவலைப்படாதே, நான் திரையில் காட்டியதெல்லாம் கற்கால ராணுவ ரகசியங்கள். எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மூன்றாம் உலகப்போரில் உபயோகப்படுத்தப்பட்டவை” என்றார். யந்திரனின் மூளையிலும், மெமரியிலும் உள்ள ரகசியங்கள் சிறிது சிறிதாக வெளிவரத்துவங்கியது.இனி வெற்றி நிச்சயம் என அனைவருக்கும் புது நம்பிக்கை தோன்றியது.

மனமெல்லாம் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார் இனியன். ”நல்ல யோசனையொன்று தந்தாய் நீ” என்றபடி கண்சிமிட்டிய கணவனை புரியாமல் பார்த்தாள் நிலா.

பி.கு:(எல்லா அறி-புனைகளிலும்(Sci-fi) மனிதனே வெல்வதுபோல் எழுதினாலும், உண்மையில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் யாருக்குத்தெரியும்? :) )

Labels: , , , , ,

Wednesday, July 23, 2008

கூகிளின் தமிழ் செய்தி சேவை

மக்களே,
கூகிள் தற்பொழுது தமிழிலும் செய்திகள் தர துவங்கியுள்ளது.
பார்க்க: http://news.google.com/news?ned=ta_in
(தமிழ்செய்தியா? இல்ல தமிழ்ச்செய்தியா? தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா)


 
Blog tracker